தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் தி.மு.க.க்கு சாதகமாக இருப்பதாக வெளியானதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. வேட்பாளர்கள் பலர் சோர்வடைந்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சட்டசபைத் தேர்தலில் சுமார் 85% வாக்குப்பதிவு நடந்தது தி.மு.க. ஆட்சியின்மீது உள்ள அதிருப்தியை காட்டுகிறது; அதனால் அ.தி.மு.க. ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை கட்சிக்குள் இருந்ததாக அவர்கள் கூறினர். ஆனால் வாக்குப்பதிவு முடிந்து சில நாட்கள் கழித்து கணக்கிட்டு பார்த்தபோது, வழக்கமாக உயர்வாக இருக்கும் வாக்குச் சதவீதம் இந்த முறை அதிகரிக்கவில்லை என தெரிய வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தி.மு.க. வாக்கு வங்கியாக கருதப்படும் பட்டியலினத்தவர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் த.வெ.க. பக்கம் சென்றிருப்பதால் அ.தி.மு.க. வெற்றி பெறும் என தலைமையிலிருந்து நம்பிக்கை ஊட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வெளியான பல கருத்துக் கணிப்புகள் தி.மு.க.க்கு சாதகமாகவும், சில கணிப்புகள் கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.க்கு குறைவான இடங்கள் கிடைக்கும் எனவும் கூறியதால் வேட்பாளர்கள் மன உளைச்சலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார். மேலும் வேட்பாளர்களை தனித்தனியாக தொலைபேசியில் அழைத்து, வெற்றி நிச்சயம் என தைரியம் அளித்து, வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகளை தீவிரப்படுத்துமாறு ஊக்கமளித்ததாக நிர்வாகிகள் கூறினர்.




