ஓட்டு எண்ணும் அறைக்குள் சீருடை அணிந்தோ அல்லது சீருடை இல்லாமலோ போலீசாரை அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் (Returning Officer) அழைத்தால் மட்டுமே போலீசார் உள்ளே செல்லலாம்; இல்லையெனில் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப். 23 அன்று நடைபெற்ற நிலையில், மே 4 அன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணும் பணி காலை 8.00 மணிக்கு தொடங்கினாலும், பணியில் ஈடுபடுவோர் காலை 5.00 மணிக்கே எண்ணும் மையத்துக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணும் அறைக்குள் ஓட்டு எண்ணும் பணிக்கு நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள், மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் உதவியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், தேர்தல் பணியுடன் தொடர்புடையவர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் அனுமதிக்கப்படுவர்.

ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரங்களை கரும்பலகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் எழுத வேண்டும்; ஒவ்வொரு சுற்று முடிவையும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. வெற்றிக்கான இடைவெளி தபால் ஓட்டுகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால், தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ணலாம்.

கடைசி சுற்று முடிந்ததும், ஒவ்வொரு தொகுதியிலும் 5 ஓட்டுச்சாவடிகளின் விவி பேட் இயந்திரங்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள பேப்பர் சிலிப்களை சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.