ஆமதாபாத்: எரிபொருள் விலைகள் தேர்தல்களால் பாதிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை மறுத்தார். தேர்தல்களுக்கும் எரிபொருள் விலைக்கும் “எந்த தொடர்பும் இல்லை” என அவர் தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் செய்யவில்லை என்றும், இந்திய சமையலறைகளில் சமையல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். பீதியை கொள்கையாக மாற விடமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் காரணமாக விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்று சிலர் கூறுவதை சுட்டிக்காட்டிய பூரி, கடந்த நான்கு ஆண்டுகளில் பல தேர்தல்களை நாடு சந்தித்துள்ளதாக கூறினார். எரிபொருள் விலைகளுக்கும் தேர்தல்களுக்கும் தொடர்பில்லை என்ற நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தேவைப்படும் நேரத்தில் அரசு முடிவெடுக்கும் என்றும், 33 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதே பிரதமரின் திட்டம் என்றும் அவர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் கொள்முதல் 27 நாடுகளிலிருந்து 41 நாடுகளாக விரிவுபடுத்தப்பட்டதாகவும், மேற்கு ஆசிய நாடுகளைத் தவிர அமெரிக்கா, நார்வே, அல்ஜீரியா ஆகிய நாடுகளிலிருந்தும் எல்பிஜி கொள்முதல் தொடங்கியதாகவும் கூறினார்.

மேற்கு ஆசிய மோதலுக்குப் பின்னர் கச்சா எண்ணெய் இறக்குமதி விலைகள் உயர்ந்தபோதும், மக்கள் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்படாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக பூரி கூறினார். சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உத்தரவுகள் வழங்கி எல்பிஜி உற்பத்தியை உயர்த்தியதுடன், உள்நாட்டு உற்பத்தி 60% அதிகரிக்கப்பட்டதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி ஏற்றிய இந்தியக் கப்பல்கள் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.