2026 தேர்தல் வெற்றி தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பெறும் வகையில் அமையும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக்கழகம் (TVK) மனிதநேயத்துடன் இயங்கும் இயக்கம் என்றும், மக்களோடு பணியாற்றும் தலைவர் விஜய் எதிர்காலத்தில் தமிழகத்தை ஆளப்போகிறார் என்றும் கூறினார். இதை “நாளைய சரித்திரம்” பதிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

பல சோதனைகள் மற்றும் எதிர்ப்புகளை கடந்து கட்சி தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறிய செங்கோட்டையன், மக்கள் கருத்துக்கணிப்புகள் தெளிவாக இருக்கும் என்றும், முதல் முறையாக வாக்களிப்பவர்கள் புதிய மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும், எதிர்பாராத முடிவுகள் வெளிவரும் என்றும், 150 முதல் 200 இடங்கள் வரை வெற்றி பெறுவோம் என்றும் அவர் கணித்தார். வேட்பாளர்களை கட்சி அலுவலகத்திற்கு வரச் சொல்லிய விவகாரம் குறித்து, இது வழக்கமாக நடைபெறும் செயல்முறை எனவும், கட்சி தொண்டர்கள் தலைமையுடன் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

நயினார் நாகேந்திரன் குறித்து அவர் பேசுகையில், இது அவரின் இறுதி தேர்தல் என்றும், தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பதவி இருக்கும் அல்லது இல்லையா என்பதை மேலிடம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.