தென் மாநிலங்களில் உள்ள சூரியசக்தி மின் நிலையங்களில் மார்ச் மாதத்தில் உற்பத்தியான மின்சார விவரங்களை மத்திய மின்சார ஆணையம் (சிஇஏ) வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம் 218.60 கோடி யூனிட் உற்பத்தியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கும் மேலாக சூரிய மின் உற்பத்திக்கு ஏற்ற வானிலை நிலவுவதால், நிலத்தில் அதிக திறன் கொண்ட சூரிய மின் திட்டங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.
மின் கட்டணச் செலவை குறைக்க வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் மேற்கூரை சூரிய மின் அமைப்புகளும் அதிகரித்து வருகின்றன. மார்ச் நிலவரப்படி மாநிலத்தின் மொத்த சூரிய மின் உற்பத்தித் திறன் 13,579 மெகாவாட்; மழை இல்லாத நாட்களில் தினமும் சராசரியாக 4–5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
சிஇஏ தரவின்படி, மார்ச் மாதத்தில் தென் மாநிலங்களில் மொத்தமாக 613 கோடி யூனிட் சூரிய மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. தமிழகம் அடுத்து கர்நாடகா 181 கோடி, ஆந்திரா 113 கோடி, தெலுங்கானா 71 கோடி, கேரளா 29 கோடி யூனிட் உற்பத்தி செய்துள்ளன; புதுச்சேரியில் 10 லட்சம் யூனிட் பதிவாகியுள்ளது.
மேலும், 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை தமிழகத்தின் சூரிய மின் உற்பத்தி 1,969 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது 2024–25ல் 1,573 கோடி யூனிட்களாக இருந்தது.





