விசிக தலைவர் தொல். திருமாவளவன், சில சட்டசபை தொகுதிகளில் கட்சியினர் தேர்தல் பணியை எதிர்பார்த்த அளவில் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் குறைபாடுகள் இருந்ததாக அவர் கூறினார்.

சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், பெரும்பாலான தொகுதிகளில் கட்சியினர் கட்டுக்கோப்பாக இருந்து சிறப்பாக பணியாற்றியதாகவும், ஆனால் சில தொகுதிகளில் ஒற்றுமையின்றி களப்பணி நடந்ததாக தகவல்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்த விவரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

களத்தில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்த திருமாவளவன், சட்டசபை தேர்தல் வரும் போதெல்லாம் பலர் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதும், வாய்ப்பு கிடைக்காதபோது ஏமாற்றம் ஏற்படுவதும் தொடர்ச்சியாக நடக்கிறது என்றார். குறைவான தொகுதிகள் கிடைக்கும் சூழலில் வேட்பாளர் மாற்றம் போன்ற முடிவுகள் தவிர்க்க முடியாததாகும் என்றும் குறிப்பிட்டார்.

புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டாண்டு தோறும் வலுப்பெற்றுள்ளதாக கூறிய அவர், இந்த முறை அந்த நிலைப்பாட்டினால் மூன்று தற்போதைய எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பரவும் காரணங்கள் உண்மை அல்ல என மறுத்த அவர், திமுக கூட்டணியில் விசிக உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது யாருடனும் விவாதிக்கவில்லை என்றும், தனது அறிவிப்புக்குப் பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.