மதுரை–பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி டோல்கேட்டில், வெள்ளிக்கிழமை காலை ‘பாஸ்டேக்’ மூலம் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் பல அரசு பஸ்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளானனர்.
இந்த டோல்கேட்டில் நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏப். 1 முதல் டோல்கேட்களில் ‘பாஸ்டேக்’ மூலம் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, டோல்கேட்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பாச்சேத்தி டோல்கேட்டை தினமும் சுமார் 167 அரசு பஸ்கள் கடந்து செல்கின்றன. பழுதான பஸ்களுக்கு மாற்றாக இயக்கப்படும் சில பஸ்களில் ‘பாஸ்டேக்’ ஏற்பாடுகள் சரியாக இல்லாத நிலையும் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முதல் ‘பாஸ்டேக் மட்டுமே’ என்ற நடைமுறை கடுமையாக அமல்படுத்தப்பட்டதால், பல பஸ்கள் நிறுத்தப்பட்டதாக தகவல்.
ராமநாதபுரம் செல்லும் இரண்டு பஸ்கள், ஏர்வாடி தர்கா செல்லும் ஒரு பஸ், மதுரை செல்லும் ஒரு பஸ், வாகுடி செல்லும் டவுன் பஸ் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டன. டோல்கேட் ஊழியர்கள் மற்றும் பஸ் ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கட்டணம் பெற்றுக் கொண்டு பஸ்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது.
டோல்கேட் ஊழியர்கள், ஏப். 1 முதல் ‘பாஸ்டேக்’ கட்டாயம் என டெப்போ மேலாளர்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதனை முறையாக பின்பற்றாததால் தேவையற்ற பிரச்னைகள் உருவாகின்றன என்றும் தெரிவித்தனர். பஸ் ஊழியர்கள் தரப்பில், விபத்துக்குப் பிறகு முன்புற கண்ணாடி மாற்றப்படும் போது பழைய ஸ்டிக்கர்களை மீண்டும் ஒட்டுவதால் ஸ்கேன் ஆகாமல் சிக்கல் ஏற்படுகிறது; பணம் இருந்தாலும் டோல்கேட்டில் தகராறு உருவாகிறது என கூறினர்.




