நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேர்தல் கமிஷனின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் ஓட்டளிப்பு சதவீதம் உயர்ந்ததாக கூறப்படும் நிலையில், சில ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறைபாடு மற்றும் திட்டமிடல் பிழைகள் காரணமாக மூத்த குடிமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் காதர் பாட்சா, அவிநாசி தொகுதிக்குட்பட்ட திருமுருகன்பூண்டி ஏ.கே.ஆர் அகாடமி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் போதிய முன்னேற்பாடு இல்லை என தெரிவித்தார். வழுக்காக அமைக்கப்பட்ட சாய்வு தளத்தில் அவரது 70 வயதை கடந்த மனைவி சரிந்து விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், தற்போது சக்கர நாற்காலியில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.
மேலும், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்படாததால் 80 வயதை கடந்தவர்களும் வெயிலில் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாக இருந்ததாக அவர் குற்றம்சாட்டினார். ஓட்டுச்சாவடி வளாகத்திற்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை என்றும், வரிசையில் நிற்பவர்களுக்கு அமர நாற்காலி அல்லது பெஞ்ச் கூட வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
பள்ளி மற்றும் பொது கட்டடங்களில் உள்ள சாய்வு தளங்கள் வழுக்காத வகையில் பிடிமானங்களுடன் இருக்க கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், தன்னார்வலர்கள் மூலம் தடையற்ற குடிநீர் வினியோகம் உள்ளிட்ட தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என கூறி, முதிய வாக்காளர்களின் கண்ணியத்தை பாதுகாக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இல்லையெனில் மாநில மற்றும் மத்திய தேர்தல் கமிஷனிடம் முறையாக புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.





