தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 அன்று எண்ணப்பட உள்ள நிலையில், தவெக நிர்வாகியும் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜூனா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், ஓட்டு எண்ணிக்கையின் போது சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படக்கூடும் எனக் கவலை தெரிவித்தார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தவெக தேர்தல் பிரசார அலுவலகம் தீ வைத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார். மேலும், அமைதியான ஓட்டு எண்ணிக்கையை குலைக்க சமூக விரோதிகள் வன்முறைக்கு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள 62 ஓட்டு எண்ணும் மையங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஓட்டு எண்ணும் மையங்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பொதுமக்கள் கூடுவதைத் தடுத்து பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோல்வி பயத்தால் திமுக தங்களை மிரட்டுவதாக குற்றம்சாட்டினார். ஓட்டு எண்ணும் மையங்களில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், ஸ்ரீரங்கம் தீவைத்த சம்பவத்தில் தொடர்புடையவரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஓட்டு எண்ணிக்கை நியாயமான முறையில், அமைதியாக நடைபெற வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை எனவும் அவர் கூறினார்.





