உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் நடந்த தொழில்நுட்ப மோசடி ஒன்று, ஒரு இளம் பெண்ணின் உயிரை பறித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மோனிகா (28) கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் மோசடி கும்பல் அவரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆள் கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் தொடர்பு இருப்பதாக கூறி, வீடியோ அழைப்பிலேயே இருக்க வேண்டும், யாரிடமும் தொடர்பு கொள்ளக் கூடாது என எச்சரித்து, அவரை கடும் மன அழுத்தத்தில் தள்ளியதாக குடும்பம் தெரிவிக்கிறது.
இறுதிச் சடங்குகளின்போதும் மோனிகாவின் மொபைல் போன் தொடர்ந்து ஒலித்ததாகவும், சடங்குகள் முடிந்த பின் உறவினர்கள் வீடியோ அழைப்பை எடுத்தபோது போலீஸ் உயரதிகாரி போல உடை அணிந்த ஒருவர் திரையில் தோன்றி, மோனிகா இறந்துவிட்டார் என கூறியபோதும் கணவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் குடும்பத்தினர் தேடியபோது, மோனிகா கைப்பட எழுதிய டைரி கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நீண்ட காலமாக நடந்த மிரட்டல், அச்சம் மற்றும் மன உளைச்சலை அவர் பதிவு செய்திருந்ததாகவும், இதன் அடிப்படையில் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் குறித்து அரசு மற்றும் ஊடகங்கள் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மிரட்டல் அல்லது சந்தேகமான தொடர்புகள் வந்தால் 1930 சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கவும்; தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 104 எண்ணில் உதவி பெறவும் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




