வாஷிங்டன்: ஈரான் மீது புதிய தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைதி பேச்சுவார்த்தைக்காக போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நகர்வு கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் போர் 60 நாட்களை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து அமெரிக்க ராணுவ மத்திய கட்டளையகம் ‘சென்ட்காம்’ (CENTCOM) அதிபர் டொனால்டு டிரம்புக்கு விளக்கம் அளித்ததாகவும், அந்த ஆலோசனை சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 6,500 டன் அளவிலான வெடிபொருட்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இரண்டு சரக்கு கப்பல்கள் மற்றும் பல விமானங்கள் மூலம் அனுப்பப்பட்ட இந்தப் பொருட்களில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலுக்கான வெடிபொருட்கள் உள்ளிட்டவை உள்ளதாக தகவல்.
சென்ட்காம் தயாரித்ததாக கூறப்படும் புதிய திட்டத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன: ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்காக்கி சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்துவது, ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சர்வதேச கப்பல் போக்குவரத்தை திறப்பது, மேலும் சிறப்பு படைகளை பயன்படுத்தி ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றுவது.
இதற்கிடையில், அமைதி பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் எச்சரித்துள்ளார். அமெரிக்கா மீது நம்பிக்கை முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், முன்பு பேச்சுவார்த்தை நடந்த காலத்திலும் ஈரான் மீது இரண்டு முறை தாக்குதல் நடந்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.





