தவெக தலைவர் விஜய் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில், நேற்று நள்ளிரவு முதல் தேவாலயம் முன் 3,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அருகிலுள்ள வீடுகள், கடைகளின் மொட்டை மாடிகளிலும் ரசிகர்கள் கூடினர்; இடையிடையே கோஷங்களும் எழுந்தன.

கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டனர். இதனால் வழக்கமான வழிபாட்டிற்கு வந்த பக்தர்கள் சிரமம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய் வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. காலை 5.20 மணியளவில் தேவாலயம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விஜய் வந்தால் அவருடன் இணைந்து வழிபாட்டில் பங்கேற்பதில் பிரச்னை இல்லை என்றாலும், அவரது வருகை குறித்து தங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என தேவாலய நிர்வாகம் தெரிவித்தது. வழிபாட்டிற்கு வந்த பக்தர்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.