புதுடில்லி: விமான இயக்கச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஜூலை மாதம் வரை சர்வதேச விமான சேவைகளின் எண்ணிக்கையை குறைக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், விமான எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது. இதனுடன், வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் வழக்கத்தை விட நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதால் செலவுகள் மேலும் உயர்ந்துள்ளன.

பொதுவாக ஒரு விமான நிறுவனத்தின் மொத்த செலவில் 30% முதல் 40% வரை எரிபொருளுக்காக செலவாகும் நிலையில், தற்போது அது 60% வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உதவியை கோரி சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.

ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி காம்ப்பெல் வில்சன் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தற்போதைய கடும் சவால்களுக்கிடையில் சேவைகளை குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, மார்ச் 31-இல் முடிந்த நிதியாண்டில் ஏர் இந்தியா குழுமம் சுமார் 22,000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.