போர்ட் பிளேயர்: அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், கடலுக்கடியில் சுமார் 2,400 சதுர மீட்டர் பரப்பளவில் இந்திய தேசியக்கொடியை விரித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன.
வங்காள விரிகுடாவின் முக்கிய சுற்றுலாத் தலமான ஸ்வராஜ் தீவு (ஹேவ்லாக்) பகுதியில் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது. வனத்துறை, கடலோரக் காவல் படை மற்றும் தனியார் டைவிங் குழுவினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த முயற்சியின் நோக்கம் தீவுகளை உலகத்தரம் வாய்ந்த ஸ்கூபா டைவிங் மற்றும் கடல்சார் சுற்றுலா மையமாக மேம்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இப்பகுதியின் தனித்துவமான கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் பாதுகாப்பு முயற்சிகளை உலகளவில் கவனத்திற்கு கொண்டு வரவும் இது உதவும் என கூறினர்.
இந்த சாதனைக்கான கின்னஸ் சான்றிதழை துணைநிலை கவர்னர் தேவேந்திர குமார் ஜோஷி பெற்றுக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக, மே 3 அன்று ஸ்வராஜ் தீவின் லைட் ஹவுஸ் அருகே, குறைந்தபட்சம் 10 மீட்டர் உயரத்தில் கடலுக்கடியில் மிக உயரமான மனித அடுக்கு உருவாக்கும் மற்றொரு கின்னஸ் முயற்சியையும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.




