சென்னையில் நடைபெற்ற டி20 போட்டியில் மும்பை அணியை சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.

டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் 1 ரன்னில் விரைவில் வெளியேறினார். ரன் வேகத்தை உயர்த்த முயன்ற ரையன் ரிக்கெல்டன் 24 பந்தில் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவும் 21 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

மற்றொரு முனையில் நமன் தீர் அரைசதம் அடித்து 57 ரன்னில் வெளியேறினார். திலக் வர்மா (5), ராபின் (5) குறைந்த ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், ஹர்திக் பாண்டியா 23 பந்தில் 18 ரன் மட்டுமே எடுத்தார். இதனால் 20 ஓவரில் மும்பை 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் சேர்த்தது.

சென்னை தரப்பில் அன்ஷூல் கம்போஜ் 3 விக்கெட்டும், நூர் அகமது 2 விக்கெட்டும் கைப்பற்றினர். கோஷ், ஓவர்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

160 ரன் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் சாம்சன் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்; உர்வில் படேல் 24 ரன் பங்களித்தார். பின்னர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்; கார்த்திக் சர்மா துணைநின்றார். இருவரும் ஆட்டமிழக்காமல் கெய்க்வாட் 67, கார்த்திக் சர்மா 54 ரன் எடுத்த நிலையில், சென்னை 18.1 ஓவரில் 160/2 எட்டி வெற்றியை உறுதிப்படுத்தியது.