கடந்த நிதியாண்டுக்கான பயணியர் போக்குவரத்து, சரக்கு கையாளுதல் மற்றும் விமான இயக்கங்கள் தொடர்பான விவரங்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அதிக பயணியர் பயன்படுத்திய ‘டாப்-6’ விமான நிலையங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த பட்டியலில் சென்னை விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 2,30,17,324 பயணியர் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தியதாகவும், இது முந்தைய ஆண்டை விட 2.7% அதிகம் எனவும் AAI தெரிவித்துள்ளது.

கோவை விமான நிலையம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 32,20,745 பயணியர் பயன்படுத்தியதாகவும், இது முந்தைய நிதியாண்டை விட 5.2% உயர்வு எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் 22,462 முறை விமானங்கள் வந்து சென்றதாகவும் AAI தரவு தெரிவிக்கிறது.

சரக்கு போக்குவரத்தில் கோவை விமான நிலையம் மொத்தம் 13,176 டன் சரக்குகளை கையாள்ந்துள்ளது; இதில் சர்வதேச சரக்கு 1,908 மெட்ரிக் டன் மற்றும் உள்நாட்டு சரக்கு 11,268 டன் ஆகும். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள், அவசர ஏற்றுமதி ஆர்டர்களை விமானம் மூலம் அனுப்புவதால் விமான சரக்கு போக்குவரத்து அதிகரிப்பதாக தெரிவித்தனர்.

மேலும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் வர்த்தகப் பயணங்களுக்காக விமானப் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் கோவை விமான நிலையத்தை சர்வதேச பயணத்திற்கு 2,97,760 பேரும், உள்நாட்டு பயணத்திற்கு 31,22,985 பேரும் பயன்படுத்தியதாக AAI தெரிவித்துள்ளது.