சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கை மே 4 நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான மத்திய தேர்தல் பார்வையாளர்களுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

ஓட்டு எண்ணும் பணி காலை 8.00 மணிக்கு தொடங்கும். எண்ணிக்கை அறைகளில் பணிக்கு நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் தேவையான ஏற்பாடுகளை முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் தேர்தல் நடந்துள்ளதால், ஆட்சி அமைப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது.

இதனை முன்னிட்டு, டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள், முடிவுகளை அறிவிக்கும் நடைமுறைகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் பேசப்பட்டன. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் கலந்து கொண்டார்.

மே 4 அன்று 5 மாநில தேர்தல் முடிவுகளை தங்களது இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தினமலர்.காம் தெரிவித்துள்ளது.