புதுடில்லி: அமலாக்கத்துறை (ED) 2025-26 நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையில், பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அதே நேரத்தில் கைது நடவடிக்கைகள் முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, 2025-26ல் 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது 2024-25ல் 214 ஆகவும், 2023-24ல் 272 ஆகவும் இருந்த நிலையில், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 27% குறைவு. அறிக்கையை ஆய்வு செய்த தனியார் செய்தி நிறுவனம், ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுதான் இந்த சரிவுக்கான காரணம் என குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகள் 1,491ல் இருந்து 2,892 ஆக உயர்ந்து, கிட்டத்தட்ட இருமடங்கானது. முடக்கப்பட்ட/இணைக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.81,422 கோடியாக பதிவாகி, முந்தைய ஆண்டின் ரூ.30,036 கோடியை விட 171% அதிகரித்துள்ளது.
பண மோசடிகளால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு தொகைகளை திருப்பி வழங்குவதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. நிதியாண்டின் தொடக்கத்தில் ரூ.15,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மொத்தம் ரூ.32,678 கோடி பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; இதில் பி.ஏ.சி.எல். (PACL) வழக்கில் மட்டும் ரூ.15,582 கோடி திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைகளில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தரவுகளின் பயன்பாடு அதிகரித்ததால், ஒரு வழக்கின் சராசரி கால அளவு நான்கு ஆண்டுகளில் இருந்து சுமார் 1.5 ஆண்டுகளாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





