ஹிமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், ஓடிக் கொண்டிருந்த ஜீப் மீது ராட்சத பைன் மரம் சரிந்து விழுந்த விபத்தில் 4 பெண் ஆசிரியர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஷம்ஷர்–குக்ரா சாலையில் பாலி–ஓயல் அருகே, பொலிரோ கேம்பர் ஜீப்பில் பெண் ஆசிரியர்கள் உட்பட 7 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் சாலையோரத்தில் இருந்த பைன் மரம் வாகனத்தின் மீது விழுந்து, ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தில் உருண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள் ஸ்நேகலதா (38), பன்டி குண்டால் (38), உஷா குமாரி (43), சீமா ஆஷாத் (54) என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் ஓட்டுநர் உட்பட 3 பேர் பலத்த காயமடைந்து, அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.