தமிழகம் மற்றும் மேலும் 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மே 4 நடைபெறுகிறது. ஓட்டு எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு தொடங்கும் நிலையில், எண்ணும் அறைகளில் மேற்பார்வையாளர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர்.
தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பை நடத்தினர்.
மக்கள் அச்சமின்றி நடமாட முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில், சுமார் 2 கி.மீ தூரத்திற்கு முக்கிய வீதிகள் வழியாக அணிவகுப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. முக்கிய சாலைகளில் போலீசார் அணிவகுப்பு மரியாதை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்; முக்கிய இடங்களில் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணும் மையங்களில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளதாகவும், மேலும் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.





