இந்திய தனியார் விண்வெளித் துறையில் முக்கிய முன்னேற்றமாக, நாட்டின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோளாக குறிப்பிடப்படும் ‘மிஷன் த்ரிஷ்டி’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த சாதனையை நிகழ்த்திய கேலக்ஸ்ஐ குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான கேலக்ஸ்ஐ உருவாக்கிய இந்த செயற்கைக்கோள், தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது உலகின் முதல் “ஆப்டோசார்” செயற்கைக்கோளாகவும் குறிப்பிடப்படுகிறது.

செயற்கைக்கோள் மூலம் அனைத்து சூழல்களிலும் பூமியின் தெளிவான படங்களைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, உள்கட்டமைப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு உடனுக்குடன் தரவுகளை வழங்கும் திறன் இதற்கு உள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 160 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், இந்தியாவில் தனியார் துறையில் உருவான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இது இந்திய விண்வெளிப் பயணத்தின் முக்கிய சாதனை என்றும், இளைஞர்களின் கண்டுபிடிப்புத் திறன் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் உதாரணம் என்றும் மோடி குறிப்பிட்டு, நிறுவனத்துக்கும் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.