மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நிகழ்ச்சியை முடித்த பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிமில் இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பின்னர் தன் தொகுதியான வாரணாசிக்கும் சென்றார். இதையடுத்து ஏப். 29 இரவு டில்லி திரும்பிய அவர், நான்கு நாட்கள் தலைநகருக்கு வெளியே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பு அளிக்கிறது. டில்லிக்கு வெளியே அவர் தங்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் சவாலாக இருப்பதாகவும், தேர்தல் கால ‘ரோடு ஷோ’ போன்ற நிகழ்ச்சிகளில் அந்தப் பணிகள் மேலும் கடினமாகும் எனவும் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.
டில்லி திரும்பிய உடனே, துவாரகாவில் உள்ள எஸ்.பி.ஜி. தலைமையகத்தில் டிரைவர்கள் உள்ளிட்ட சுமார் 4,500 பணியாளர்களுக்கு பிரதமர் விருந்து அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அந்த நிகழ்வில், தன்னை பாதுகாப்பதில் அவர்கள் சந்திக்கும் சிரமங்களைத் தாம் அறிந்திருப்பதாகவும், தன்னை அரணாக இருந்து பாதுகாத்ததற்கு நன்றி என்றும், ஆண்டவனுக்கும் நன்றி என்றும் பிரதமர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருந்தில் பங்கேற்றவர்களுக்கு இது மகிழ்ச்சியான அதிர்ச்சியாக இருந்ததாகவும், இதுபோன்று பிரதமர் ஒருவர் எஸ்.பி.ஜி.க்கு விருந்து அளித்து நன்றி தெரிவித்தது முன்பு இல்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த விருந்தில் பிரதமரின் உதவியாளர்களும் கலந்து கொண்டனர். பிரதமருக்கு ஐந்து தனிப்பட்ட உதவியாளர்கள் இருப்பதாகவும், அவர் எங்கு சென்றாலும் உடன் சென்று உடைகள் உள்ளிட்ட தேவைகளை அவர்கள் கவனிப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





