மும்பை: மும்பை ஜே.ஜே. நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் திடீரென உடல்நலக் குறைவடைந்து உயிரிழந்த சம்பவத்தில், தர்பூசணி காரணமில்லை என மஹாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) முதற்கட்ட சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்கள் அப்துல்லா (40), அவரது மனைவி நஸ்ரின் (35) மற்றும் மகள்கள் ஜைனாப் (13), ஆயிஷா (16). ஏப்ரல் 26 அன்று உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது அனைவரும் சேர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாகவும், அவர்கள் சென்ற பிறகு குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த தர்பூசணியை குடும்பத்தினர் சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
சில நிமிடங்களிலேயே வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளுடன் நால்வரும் மயங்கி விழுந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஆயிஷா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது; மற்ற மூவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். பிரியாணி சாப்பிட்ட உறவினர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால், தர்பூசணியால் விஷத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து உடற்கூறாய்வு தொடர்பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தர்பூசணி, பிரியாணி, தண்ணீர், மசாலா பொருட்கள், சமைக்காமல் வைத்திருந்த கோழிக்கறி, அரிசி, பேரீச்சம் பழம் உள்ளிட்ட பல பொருட்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் வைத்திருந்த பானையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மஹாராஷ்டிரா FDA மற்றும் கலினாவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
FDA அதிகாரி ஒருவர் கூறுகையில், நோய் தாக்கிய வேகம், தீவிரம் மற்றும் ஒரே குடும்பத்தில் பலர் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டமை ஆகியவை சாதாரண உணவுவழி தொற்றுடன் ஒத்துப்போகவில்லை என்றார். உணவு அசுத்தமாவதால் வாந்தி அல்லது அஜீரணக் கோளாறு ஏற்படலாம்; ஆனால் இவ்வளவு கடுமையான விஷத்தன்மை மற்றும் மரணத்திற்கு அது வழிவகுப்பது அரிது என்றும், நச்சுத் தன்மையை உருவாக்கும் பாக்டீரியா காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். இதன் உறுதிப்படுத்தல் தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில்தான் தெரிய வரும் என்றும், மற்ற உணவுப் பொருட்களும் தொடர்ந்து சோதனையில் உள்ளன என்றும் கூறினார். மேலும், உடற்கூறாய்வில் உடல்களில் ‘மார்பின்’ இருப்பது தெரியவந்ததாக கூறப்பட்ட நிலையில், போலீசார் பிற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.





