கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை எளிய மக்களுக்கும் எட்டச் செய்யும் நோக்கில் மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு இயந்திரத்தை உருவாக்கியவர். இந்த ஆண்டு நோபல் அமைதி பரிசுக்கான பரிந்துரை பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மலிவு விலை தொழில்நுட்பத்தின் மூலம் பெண்களுக்கு அணுகக்கூடிய சுகாதாரப் பொருட்களை வழங்கிய அவரது முயற்சி உலகளவில் கவனம் பெற்றது. அவரது வாழ்க்கை மற்றும் பணியை மையமாக வைத்து அக்ஷய் குமார் நடித்த ‘பேட்மேன்’ திரைப்படமும் வெளியானது.
முன்னதாக மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசுக்கு 208 தனிநபர்கள் மற்றும் 79 அமைப்புகள் என மொத்தம் 287 பேர்/அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முருகானந்தம் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். ஆப்பிரிக்கா பகுதிகள், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் சேர்த்து சுமார் 40 நாடுகளுக்கு மலிவு விலை தொழில்நுட்பத்தை கொண்டு சென்றுள்ளதாகவும், டிரினிடாட் மற்றும் டொபாகோ போன்ற சிறிய தீவுகளிலும் இயந்திரம் பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட இதுகுறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்றும், இந்தியாவில் லடாக் முதல் கன்னியாகுமரி வரை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய அரசின் உயரிய விருதுக்குப் பிறகு கிடைத்த இந்த உலகளாவிய அங்கீகாரத்தை சாதனையாகக் கருதுவதாகவும் கூறினார்.




