புதுடில்லி: தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 9ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களுக்கு தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, அவற்றை அவசர அடிப்படையில் அச்சிட்டு வினியோகிக்கும் பணியில் என்.சி.இ.ஆர்.டி. ஈடுபட்டுள்ளது.

டில்லியை தலைமையிடமாகக் கொண்ட தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) கல்வி சார்ந்த ஆராய்ச்சி, பயிற்சி பணிகளுடன், மத்திய மற்றும் மாநில பள்ளிகளுக்கான பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் பாடப்புத்தக அச்சிடுதலையும் மேற்கொள்கிறது.

இந்த கல்வியாண்டு முதல், மத்திய அரசின் சமீபத்திய கல்விக் கொள்கைக்கு ஏற்ப 9ம் வகுப்பு பாடங்கள் மற்றும் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்டு வருகின்றன. சமீப வாரங்களில் தேவை உயர்ந்ததால், “போர்க்கால அடிப்படையில்” அச்சிடப்பட்டு நாடு முழுதும் வினியோகிக்கப்படுவதாக என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்திற்கு மாறுவது நாடு தழுவிய பெரிய சீர்திருத்தம் என்றும், அதற்கேற்ப புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவது சவாலான பணியாகும் என்றும் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வசதிக்காக டில்லி தலைமையகத்தில் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், வார இறுதி நாட்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக ஆர்டர் செய்யும் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு புத்தகங்களை நேரடியாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.