மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) இன்று (மே 3) மதியம் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. இந்தத் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.

எம்பிபிஎஸ், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்காக ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது; ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கும் எதிர்மதிப்பீட்டு முறை அமலில் உள்ளது.

இந்த ஆண்டு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 30 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 552 நகரங்களில் சுமார் 5,500 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.