அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் பதவிக்கான கட்சி சார்பற்ற முதன்மை தேர்தல் ஜூன் 2 அன்று நடைபெற உள்ளது. எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நவம்பர் 3 அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும்.

இந்தப் போட்டி சமீபத்தில் மேலும் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய பிப்ரவரி 4 கடைசி நாளாக இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை உறுப்பினர் நித்யா ராமன் (44) போட்டியில் களமிறங்கினார். தற்போதைய மேயர் கரேன் பாஸ் தொடக்கத்தில் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

கடந்த மாத இறுதி நிலவரப்படி வெளியான கணிப்புகளில் நித்யா ராமன் சுமார் 60% ஆதரவுடன் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் 1981 ஜூலை 28 அன்று கேரளாவில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். ஆறு வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, குடும்பத்துடன் லூசியானாவில் குடியேறினார்; 22 வயதில் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.

நகர்ப்புற திட்டமிடலில் முதுகலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் சுகாதாரம் மற்றும் துப்புரவு மேம்பாட்டை மையமாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சி அமைப்பை நிறுவியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல சமூக மேம்பாட்டு முயற்சிகளையும் தொடங்கியுள்ளார்.

நித்யா ராமன் 2020ல் முதன்முறையாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை வார்டு உறுப்பினர் தேர்தலில் வென்று, 2024லும் மீண்டும் வென்றார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது. இந்திய வம்சாவளி அரசியல்வாதி ஜோஹ்ரான் மம்தானியுடன் அரசியல் நிலைப்பாடுகள் ஒத்துப்போகும் என கூறி, சிலர் அவரை ‘அடுத்த மம்தானி’ எனவும் குறிப்பிடுகின்றனர்.