சென்னை போலீசார் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பின்னணியில், சம்பவம் குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக்கிற்கு தமிழக டிஜிபி சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையிலுள்ள ஒரு நகைக் கடையில் சுமார் இரண்டு கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பான விசாரணையில், கடையில் பணியாற்றிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சக்திசிங் (26) மற்றும் அவரது கூட்டாளி லட்சுமணன் சிங் (27) ஆகியோர் திருடியதாக போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து சென்னை தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்துக்கு சென்று லட்சுமணன் சிங்கை கைது செய்தனர். விசாரணையில், ராஜஸ்தானில் நகைக்கடை நடத்தும் வர்தாராம் குர்ஜருக்கு லட்சுமணன் சிங் பணம் அனுப்பியதாக தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
வர்தாராமிடம் விசாரணை நடத்த சென்னை தனிப்படை காவலர்கள் சிவா, கோபி ஆகியோர் ராஜஸ்தான் சென்று பாக்ரி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் வர்தாராம் விஷம் குடித்து உயிரிழந்தார்; அவரது சகோதரர் புத்தாரமும் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வர்தாராமின் மனைவி கிரண்தேவி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை போலீசார் மற்றும் அவர்களுடன் சென்றதாக கூறப்படும் நகைக்கடை உரிமையாளர் மகாவீர் மேத்தா ஆகியோர் வர்தாராமை மிரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிவா, கோபி, மகாவீர் மேத்தா மற்றும் அடையாளம் தெரியாத இருவர் என ஐந்து பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





