மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை பணியாளர் நியமனம் தொடர்பாக ஆளும் திரிணமுல் காங்கிரஸ் (TMC) தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

ஓட்டு எண்ணிக்கை பணியில் மேற்பார்வையாளர்களாக மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களை நியமிப்பதாக தேர்தல் கமிஷன் ஏப்.13 அன்று வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில அரசு ஊழியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என திரிணமுல் கோரியது.

இந்த வழக்கை முன்பே கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஓட்டு எண்ணிக்கை பணிக்கு யாரை நியமிப்பது என்பது தேர்தல் கமிஷனின் அதிகாரம் என்று கூறியிருந்தது. அதனை எதிர்த்து திரிணமுல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் அவசர வழக்காக விசாரணை நடைபெற்றது.

திரிணமுல் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, ஏப்.13 சுற்றறிக்கை குறித்து ஏப்.29 அன்று தான் தெரிய வந்ததாகவும், ஒவ்வொரு எண்ணிக்கை மேஜையிலும் ஏற்கனவே ‘நுண் பார்வையாளர்’ என்ற பெயரில் மத்திய அதிகாரி இருப்பதால் கூடுதல் மத்திய ஊழியர்கள் ஏன் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

ஆனால் விதிகளின்படி மத்திய அல்லது மாநில அதிகாரிகளை நியமிக்கலாம் என்பதால் தேர்தல் கமிஷனின் சுற்றறிக்கை விதிகளுக்கு முரணானது என்று சொல்ல முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. தேர்தல் கமிஷன் தரப்பில், ஓட்டு எண்ணிக்கையின் போது மாநில அரசு ஊழியர்களும் இருப்பர் என்றும், வேட்பாளர்களுக்கு எண்ணிக்கை முகவர்கள் இருப்பதால் முறைகேடு அச்சம் தேவையற்றது என்றும் கூறப்பட்டது. இதையடுத்து கூடுதல் உத்தரவுகள் தேவையில்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.