மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை பணிக்கான பணியாளர் நியமனம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் எடுத்த முடிவை எதிர்த்து திரிணமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஓட்டு எண்ணிக்கை பணியில் யாரை நியமிக்க வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம்; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் சமீபத்தில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை அடுத்த நாள் நடைபெற உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் டிஎம்சி மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
ஓட்டு எண்ணிக்கை பணிக்காக மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமிப்பதாக தேர்தல் கமிஷன் ஏப்.13 அன்று சுற்றறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து டிஎம்சி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், தேர்தல் கமிஷன் தேவையானவர்களை நியமிக்கலாம் எனக் கூறி உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து டிஎம்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் அவசர வழக்காக விசாரணை நடந்தது. டிஎம்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சுற்றறிக்கை ஏப்.29 அன்று தான் தெரிய வந்ததாகவும், ஏற்கெனவே ஒவ்வொரு மேஜையிலும் மத்திய அதிகாரி நுண் பார்வையாளராக இருப்பதால் கூடுதல் மத்திய ஊழியர்கள் ஏன் எனவும் வாதிட்டார். விதிகள் மத்திய அல்லது மாநில அதிகாரிகளை நியமிக்க அனுமதிக்கின்றன என்பதால் சுற்றறிக்கையை விதிகளுக்கு எதிரானது என கூற முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டது. தேர்தல் கமிஷன் தரப்பில், மாநில அரசு ஊழியர்களும் ஓட்டு எண்ணிக்கையில் இருப்பார்கள்; மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பதால் முறைகேடு அச்சம் தேவையற்றது என வாதிடப்பட்டது. கூடுதல் உத்தரவுகள் தேவையில்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டை நிராகரித்தது.




