சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் நேற்று காலை முதல் மாலை வரை நிறுத்தப்பட்டன.
கடந்த ஏப். 26-ம் தேதி நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழுவில், நடிகர்–நடிகையர் சம்பளம் வருவாய் பகிர்வு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கோரிக்கைக்கு கவனம் ஈர்க்கும் வகையில் ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, சென்னை மற்றும் வெளியூரில் நடைபெற்று வந்த பல படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆண்டனி, ரியோ உள்ளிட்டோர் நடிக்கும் படங்களும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வேலை நிறுத்தத்தால் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சங்கம் கூறியது. வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளர்களின் லாப–நஷ்டங்களில் நடிகர்கள், இயக்குநர்கள் பங்கு கொள்கிறார்கள்; ஆனால் தமிழ் சினிமாவில் அது நடைமுறையில் இல்லை என தெரிவித்தது.
மேலும், இந்த விவகாரம் குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக நடிகர் சங்கத்திடம் பலமுறை எடுத்துரைத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் வேலை நிறுத்தம் நடத்த வேண்டியதாகிவிட்டதாக கூறியது. இந்நடவடிக்கைக்கு பெப்சி மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் சங்கம் ஆரம்பம் முதலே எதிர்ப்பை பதிவு செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.





