சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 10 புதிய அரசு மருந்தியல் கல்லூரிகளை தொடங்கும் திட்டம், பல வளாகங்களில் இடவசதி போதாமை காரணமாக சிக்கலை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட தனியார் மருந்தியல் கல்லூரிகள் உள்ள நிலையில், ஆண்டுதோறும் பல புதிய தனியார் கல்லூரிகள் தொடங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய அரசு மருந்தியல் கல்லூரிகள் தொடங்கப்படவில்லை. தற்போது அரசு பி.பார்ம். கல்லூரிகள் சென்னை, மதுரையில் மட்டுமே உள்ளன; டி.பார்ம். கல்லூரிகள் தஞ்சாவூர், மதுரை, கோவையில் செயல்படுகின்றன.
மருந்தியல் கல்வியில் அரசு பங்கு அதிகரிக்கவும், ஆசிரியர் பணியிட பற்றாக்குறையை நிரப்பவும் வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன் மக்கள் நல்வாழ்வுத் துறை 10 மருந்தியல் கல்லூரிகளை தொடங்க திட்டமிட்டு, ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தது.
10க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்ட குழு, ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கே போதிய வசதிகள் இல்லாத இடங்களில் புதிய மருந்தியல் கல்லூரியை தொடங்குவது கடினம் என தெரிவித்துள்ளது. புதிய கட்டடம் கட்டி தொடங்கினால் காலதாமதம் ஏற்படும் என்பதால், மருத்துவக் கல்லூரிகளின் இணை கல்லூரியாக தற்போதுள்ள கட்டடங்களிலேயே குறைந்தது 50 மாணவர்கள் சேர்க்கை கொண்டு தொடங்க முயற்சி நடக்கிறது என அதிகாரிகள் கூறினர்.
சில வளாகங்களில் இடவசதி பற்றாக்குறை இருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள், சாத்தியமான கல்லூரிகளை விரைவில் தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் குறிப்பிட்ட இடங்களில் மருந்தியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.





