வாஷிங்டன்: ஈரான் தொடர்பான போர் முடிவுக்கு வந்தால்தான் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் பெரிய சரிவு ஏற்படும் என்றும், அதனால் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறையும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுடன் பிப். 28-ல் போரைத் தொடங்கியதாகவும், இதன் பின்னணியில் உலக கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயர்ந்ததுடன் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

போர் தொடங்கி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், மேற்காசியாவில் பதற்றம் தொடர்கிறது. இதற்கிடையில், 2027-க்கு முன் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைய வாய்ப்பில்லை என அமெரிக்க பெட்ரோலியத் துறை அமைச்சர் கிறிஸ் ரைட் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த சூழலில், அமெரிக்காவிலும் பெட்ரோல் விலை உயர்ந்திருப்பது போர் காரணமாக ஏற்பட்ட உயர்வே என டிரம்ப் குறிப்பிட்டார். போர் முடிந்தவுடன் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்து, பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றின் விலையும் குறையும்; அப்போதுதான் அமெரிக்கர்களும் குறைந்த விலையில் எரிபொருளை எதிர்பார்க்கலாம் என்றார்.

மேலும், ஈரானுக்கு அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்றும், அது உலகிற்கு பெரிய ஆபத்தாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். போர் நிறுத்தத்துக்காக ஈரான் புதிய முன்மொழிவு ஒன்றை வழங்கியுள்ளதாகவும், அதில் தனக்கு திருப்தியில்லை என்றும் கூறிய டிரம்ப், அமைதி பேச்சுகளில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும் இறுதி முடிவை எட்ட முடியுமா என்பது உறுதியாக தெரியவில்லை என்றார்.