நடிகர்களின் சம்பள விவகாரத்தை மையமாகக் கொண்டு, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் பட தயாரிப்பு பணிகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக திரையுலகில் பேசப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் தரப்பில், படம் வெளியான பிறகே வசூல் நிலை தெளிவாகும் நிலையில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே முழுச் சம்பளத்தைப் பெறுவது தயாரிப்பாளர்களுக்கு அதிக நிதிச் சுமையாகிறது என வாதிடப்படுகிறது. நட்சத்திர நடிகர்களின் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவு உயர்வால் முதலீடு திரும்பாத நிலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இருதரப்பும் மாறிமாறி அறிக்கைகள் வெளியிட்ட நிலையில், தயாரிப்பாளர் சங்கம் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியது. இதனால் 33 படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக நடிகர் சங்கம், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது 10% உள்ளிட்ட கட்டங்களாக சம்பளம் வழங்க வேண்டும் என ஒரு கட்டண அட்டவணையை முன்வைத்தது. நாள் கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்களுக்கு படப்பிடிப்பு நடந்த நாளிலேயே 70% வழங்கி, மீதியை டப்பிங்கிற்கு முன் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இந்த முன்மொழிவை தயாரிப்பாளர் சங்கம் ஏற்கவில்லை. நடிகர்களை “வழிக்கு கொண்டு வர” தொடர் வேலைநிறுத்தம் குறித்து ஆலோசனை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய அரசு அமைந்ததும் தமிழக அரசு கூட்டுக்குழு அமைத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என திரையுலகினர் வலியுறுத்தியுள்ளனர்.