சென்னை: தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும், ஆறு மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க பாமக நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தடையாக இருந்த விதியை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளதாக கூறினார். இதனால் தமிழகத்தில் புதிதாக உருவான ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட வேண்டும் என்பதே பாமக நோக்கம் என்றும் அவர் கூறினார். எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் 13 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் ஒன்றும் தொடங்கப்படவில்லை என்றும் விமர்சித்தார்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை 2025-ல் தான் அமலுக்கு வந்ததாக கூறிய அவர், அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் திமுக அரசு விரும்பியிருந்தால் ஆறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை திறக்க முடிந்திருக்கும் என்றார். மேலும், அடுத்த சில நாட்களில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட புதிய அரசு அமைந்ததும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கும் நடவடிக்கையை பாமக மேற்கொள்ளும் என தெரிவித்தார்.





