லண்டன்: லியோனார்டோ டாவின்சி தன்னைத் தானே வரைந்ததாக கூறப்படும் ஒரு ஓவியம், இதுவரை உரிமையாளர்களால் நகல் என கருதப்பட்ட நிலையில், தடயவியல் ஆய்வில் கிடைத்த விரல் ரேகை ஆதாரங்கள் மூலம் அது ‘ஒரிஜினல்’ படைப்பு என உறுதியாகியுள்ளது.

இத்தாலியின் கெய்ட்டி பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் லுயிஜி கப்பாசோ தலைமையிலான குழு, 2008-ல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இந்த ஓவியத்தை ஆய்வு செய்து, இது டாவின்சியே வரைந்தது என முடிவு செய்தது. ஓவியத்தில் பதிவான மூன்று விரல் ரேகைகளே முக்கிய ஆதாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ரேகைகளை டாவின்சியின் மற்றொரு ஓவியத்தில் முன்பே கண்டறியப்பட்ட ரேகைகளுடன் ஒப்பிட்டு, இரண்டும் ஒரே நபருக்குரியது என குழு தெரிவித்தது. ஓவிய வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் உதவியுடன் ரேடியோ கார்பன் டேட்டிங் மற்றும் பிக்மென்ட் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இது ஓவிய வரலாற்று கருத்து அல்ல; அறிவியல் சான்றுகளின் அடிப்படையிலான உறுதிப்படுத்தல் என குழு விளக்கமளித்துள்ளது. கார்பன் டேட் முறையின்படி, இந்த ஓவியம் 1478 முதல் 1520 இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்றும், டாவின்சியின் கையெழுத்து மற்றும் சில குறியீடுகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.