லண்டன்: லியோனார்டோ டாவின்சி தன்னைத் தானே வரைந்ததாக கூறப்படும் ஒரு ஓவியம், இதுவரை உரிமையாளர்களால் நகல் என கருதப்பட்ட நிலையில், தடயவியல் ஆய்வின் மூலம் அது ‘ஒரிஜினல்’ என மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்தாலி கெய்ட்டி பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் லுயிஜி கப்பாசோ தலைமையிலான குழு, 2008ல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஓவியத்தை ஆய்வு செய்து, அதில் பதிவான மூன்று விரல் ரேகைகளை கண்டறிந்தது. அந்த ரேகைகளை டாவின்சியின் மற்றொரு ஓவியத்தில் கிடைத்த ரேகைகளுடன் ஒப்பிட்டு, ஒரே நபருக்குரியவை என முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓவிய வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் உதவியுடன், ரேடியோ கார்பன் தேதி நிர்ணயம் மற்றும் பிக்மென்ட் ஆய்வு உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஓவியத்தில் டாவின்சியின் கையெழுத்தும் சில குறியீடுகளும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்பன் டேட் முறையின் அடிப்படையில், இந்த ஓவியம் 1478 முதல் 1520க்குள் வரையப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தாங்கள் ஓவிய வரலாற்று ஆய்வாளர்கள் அல்ல; அறிவியல் மற்றும் தடயவியல் அடிப்படையில் முடிவுக்கு வந்ததாக லுயிஜி கப்பாசோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் டாவின்சியின் மற்றொரு ஓவியத்தில் இரண்டு ரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண் ஓவியத்தில் சேதமடைந்த நிலையில் கிடைத்த ரேகைகள், தற்போது கண்டறியப்பட்ட ரேகைகளுடன் ஒரே நபருக்குரியவை போல இருந்தாலும், அவை டாவின்சியுடையவை என உறுதியாக நிரூபிக்க முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.




