லண்டன்: லியோனார்டோ டாவின்சி தன்னைத் தானே வரைந்ததாக கூறப்படும் ஒரு ஓவியம், இதுவரை உரிமையாளர்களால் நகல் என கருதப்பட்ட நிலையில், தடயவியல் ஆய்வில் மூன்று விரல் ரேகைகள் கிடைத்ததன் மூலம் அது ‘ஒரிஜினல்’ என உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் கெய்ட்டி பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் லுயிஜி கேப்பசோ தலைமையிலான விஞ்ஞானிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு, அந்த ஓவியத்தில் பதிவான ரேகைகளை டாவின்சியின் மற்றொரு ஓவியத்தில் கிடைத்த ரேகையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ததாக கூறினர். ஒப்பீட்டின் அடிப்படையில் அவை டாவின்சிக்கே உரியவை என முடிவு செய்துள்ளனர்.
மேலும் ஓவிய வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் உதவியுடன் ரேடியோ கார்பன் டேட்டிங் மற்றும் பிக்மென்ட் (நிறத் துகள்கள்) ஆய்வு போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாங்கள் ஓவிய வரலாற்று ஆய்வாளர்கள் அல்ல; விஞ்ஞான மற்றும் தடயவியல் அடிப்படையிலேயே முடிவுக்கு வந்ததாக லுயிஜி தெரிவித்தார். ஓவியத்தில் டாவின்சியின் கையெழுத்தும் சில குறியீடுகளும் இருப்பதும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
கார்பன் டேட் முறையின் அடிப்படையில் இந்த ஓவியம் 1478 முதல் 1520 காலப்பகுதிக்குள் வரையப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் டாவின்சியுடன் தொடர்புடைய சில ஓவியங்களில் விரல் ரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஆனால் அனைத்தையும் உறுதியாக அவருக்கே என நிரூபிக்க முடியாத நிலை இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




