லியோனார்டோ டாவின்சி வரைந்ததாக கூறப்படும் ஒரு சுய ஓவியம், தடயவியல் ஆய்வில் கிடைத்த விரல் ரேகை ஆதாரத்தின் மூலம் ‘ஒரிஜினல்’ படைப்பு என உறுதி செய்யப்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாவின்சி 53 வயதில் தன்னைத் தானே வரைந்ததாக கூறப்படும் இந்த ஓவியம், இதுவரை அதன் உரிமையாளர்களால் நகல் எனவே கருதப்பட்டு வந்தது. 2008-ல் இது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அறிவியல் முறையில் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இத்தாலியின் கெய்ட்டி பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் லுயிஜி கப்பசோ தலைமையிலான குழு, ஓவியத்தில் பதிவான மூன்று விரல் ரேகைகளை கண்டறிந்ததாக தெரிவித்தது. அவற்றை டாவின்சியின் மற்றொரு ஓவியத்தில் இருந்த ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில், ஒரே நபருக்குரியவை என முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஓவிய வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் உதவியுடன் ரேடியோ கார்பன் டேட்டிங், பிக்மென்ட் ஆய்வு போன்ற முறைகளும் பயன்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில், இந்த ஓவியம் 1478 முதல் 1520 காலப்பகுதிக்குள் வரையப்பட்டிருக்கலாம் என்றும், டாவின்சியின் கையெழுத்து மற்றும் சில குறியீடுகள் இருப்பதும் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் ஓவிய வரலாற்று ஆய்வாளர்கள் அல்ல, விஞ்ஞானிகள் என்றே அணுகியதாகவும், விரல் ரேகை ஆதாரமே முக்கியமாக இருந்ததாகவும் லுயிஜி கப்பசோ கூறியுள்ளார்.