லண்டன்: லியோனார்டோ டாவின்சி தன்னைத் தானே வரைந்ததாக கூறப்படும் ஒரு ஓவியம், இதுவரை உரிமையாளர்களால் ‘நகல்’ என கருதப்பட்ட நிலையில், அதில் கண்டறியப்பட்ட மூன்று விரல் ரேகைகள் மூலம் அது ‘ஒரிஜினல்’ என தடயவியல் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் கெய்ட்டி பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் லுயிஜி கப்பாசோ தலைமையிலான விஞ்ஞானிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு, டாவின்சி 53 வயதில் வரைந்ததாக கூறப்படும் இந்த சுய ஓவியத்தை ஆய்வு செய்து, அது டாவின்சியே வரைந்தது என முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஓவியம் 2008ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஓவியத்தில் பதிவான விரல் ரேகைகளை, டாவின்சியின் மற்றொரு ஓவியத்தில் முன்பு கண்டறியப்பட்ட ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில், இரண்டும் ஒரே நபருக்குரியது என உறுதி செய்யப்பட்டதாக குழு தெரிவித்தது. ஓவிய வல்லுநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உதவியுடன் ரேடியோ கார்பன் டேட்டிங் மற்றும் பிக்மென்ட் ஆய்வு உள்ளிட்ட அறிவியல் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
தாங்கள் ஓவிய வரலாற்று ஆய்வாளர்கள் அல்ல, விஞ்ஞானிகள் என்ற அடிப்படையில் தடய ஆதாரங்களை மையமாக வைத்து முடிவு செய்ததாக லுயிஜி கூறினார். கார்பன் டேட் முறையின் அடிப்படையில் இந்த ஓவியம் 1478 முதல் 1520க்குள் வரையப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஓவியத்தில் டாவின்சியின் கையெழுத்து மற்றும் சில குறியீடுகளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.




