புதுடில்லி: தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்டத்தின் கீழ், கணவர் அல்லது மனைவியின் வருமானம் மற்றும் வருமானவரி தாக்கல் தொடர்பான விவரங்களை துணைவர் கோர முடியாது என டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனிநபரின் வருமானம் மற்றும் வரி விவரங்கள் அவரின் அந்தரங்கத் தகவல்களாகும்; அவை தன்னிச்சையாகவே பொது நலன் சார்ந்தவை அல்ல என நீதிமன்றம் குறிப்பிட்டது. பெரிய அளவிலான பொது நலன் நிரூபிக்கப்படாத நிலையில், ஆர்.டி.ஐ. சட்டத்தின் 8(1)(ஜே) பிரிவின் கீழ் இத்தகவல்கள் விலக்கு பெறும் என்றும் தெரிவித்தது.

இந்த வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜீவனாம்ச வழக்கில் கணவரின் உண்மையான வருமானத்தை நிரூபிக்க, அவரது வருமானவரி தாக்கல் விவரங்களை ஆர்.டி.ஐ. மூலம் கேட்டிருந்தார். இதையடுத்து, 2007–08 நிதியாண்டுக்கான விவரங்களை வழங்குமாறு மத்திய தகவல் ஆணையம் (CIC) 2021ல் வருமானவரி துறைக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து கணவர் டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ், ஆர்.டி.ஐ. சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டி, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தார்.

மேலும், கணவரின் வருமானத்தை சட்டப்பூர்வமான பிற வழிமுறைகள் மூலம் நிரூபிக்க மனைவிக்கு உரிமை இருப்பதாகவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.