புதுடில்லி: சென்னை ஐ.ஐ.டி. (ஐ.ஐ.டி. மெட்ராஸ்) தொழில்நுட்பம் மற்றும் நிதி ஆதரவுடன் உருவான விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனமான கேலக்ஸ்-ஐ (GalaxEye), புவி கண்காணிப்புக்கான புதிய “ஆப்டோசார்” (OptoSAR) தொழில்நுட்பம் கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ஏவுதல் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் நடைபெற்றது.

நீண்ட காலமாக இந்திய விண்வெளித் துறை இஸ்ரோ தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசின் கொள்கை மாற்றங்களால் தனியார் நிறுவனங்களுக்கும் வாய்ப்பு விரிந்துள்ளது. இதற்காக 2020ல் உருவாக்கப்பட்ட இன்-ஸ்பேஸ் (IN-SPACe) அமைப்பு அனுமதி, வழிகாட்டுதல், உட்கட்டமைப்பு அணுகல் போன்றவற்றை வழங்குகிறது; நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் செயற்கைக்கோள் ஏவுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஆதரவளிக்கிறது.

2021ல் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சிலர் இணைந்து தொடங்கிய கேலக்ஸ்-ஐ நிறுவனத்தின் நோக்கம், விண்வெளியில் இருந்து புவியை கண்காணித்து கிடைக்கும் தரவுகளை செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களின் மூலம் பயனுள்ள தகவல்களாக மாற்றுவதாகும். இதன் புவி கண்காணிப்பு திட்டத்திற்கு ‘திருஷ்டி மிஷன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

திருஷ்டி செயற்கைக்கோளின் முக்கிய சிறப்பு, உலகிலேயே முதன்முறையாக ஒளிப்பட (Optical) மற்றும் ரேடார் (SAR) ஆகிய இரண்டு படமெடுப்பு முறைகளையும் ஒரே தளத்தில் இணைத்திருப்பதாகும்; இதற்கே “ஆப்டோசார்” என்று பெயரிட்டுள்ளனர். ஒளிப்பட முறையில் தெளிவான வண்ணப் படங்கள் கிடைத்தாலும் மேகமூட்டத்தில் நிலப்பரப்பு மறையும்; ரேடார் முறையில் மேகம், மழை, இருள் மற்றும் இரவு நேரத்திலும் படம் எடுக்க முடியும்.

ஓய்வுபெற்ற விண்வெளி நிபுணர்கள் கூறுகையில், இந்தியா போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் மேகமூட்டம் அதிகம் இருப்பதால் சாதாரண ஒளிப்பட செயற்கைக்கோள்களால் பல நேரங்களில் தெளிவான தரவு கிடைப்பதில் தடைகள் ஏற்படுகின்றன. இதை சமாளிக்க, திருஷ்டியில் தெளிவான வானிலையில் உயர் தர வண்ணப் படங்களை எடுக்கும் எலக்ட்ரோ-ஆப்டிகல் உணர்திறன் கருவிகளும், அனைத்து வானிலையிலும் நாள்-இரவு படமெடுக்கும் SAR ரேடார் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.