வாஷிங்டன்: ஈரானிடமிருந்து வந்துள்ள புதிய அமைதி முன்மொழிவுகளை பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அதே நேரத்தில், ஈரான் “தவறாக நடந்து கொண்டால்” மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடங்கியதாக கூறப்படுகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் நடந்த முதல் கட்ட பேச்சு தோல்வியடைந்தது; இரண்டாம் கட்ட பேச்சு நடத்துவது குறித்து இரு தரப்புக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் தொடர்கிறது.
இந்த சூழலில், பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு ஈரான் புதிய முன்மொழிவுகளை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 14 அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முடக்கப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவித்தல், போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு, ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள அமெரிக்க படைகளை வெளியேற்றல், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறத்தல், அமெரிக்க கடற்படையின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருதல், மேலும் ஈரான் மற்றும் லெபனான் மீதான போரை 30 நாட்களுக்குள் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருதல் போன்ற கோரிக்கைகள் இதில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்மொழிவுகளை பரிசீலிப்பதாக கூறிய டிரம்ப், அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் செய்த செயல்களுக்கு அவர்கள் “உரிய விலையை” இன்னும் கொடுக்கவில்லை என்பதால், புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என அவர் கூறியதாக தகவல்.
மேலும், ஈரானின் முன்மொழிவில் அணுசக்தி திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே அணுசக்தி திட்டம் குறித்து பேச முடிவு செய்துள்ளதாக ஈரான் தரப்பு கூறப்படுகின்ற நிலையில், அணுசக்தி தொடர்பான உறுதியான ஒப்பந்தம் இல்லாமல் போரை முடிக்க அமெரிக்கா தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.





