கோடை வெயிலின் உச்சக் காலமாக கருதப்படும் ‘கத்திரி வெயில்’ இன்று தமிழகத்தில் தொடங்குகிறது. இந்த நாட்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்; சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°C-க்கும் மேல் உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 4 முதல் மே 28 வரை 24 நாட்கள் கத்திரி வெயில் காலமாக கணிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் பல பகுதிகளில் பகல் நேர உச்ச வெப்பம் அதிகமாக பதிவாகும் என வானிலை அதிகாரிகள் கூறினர்.
வெப்பம் அதிகரிக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழையும் பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 10 செ.மீ. மழை அதிகபட்சமாக பதிவானது. அடுத்ததாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 8 செ.மீ.; மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சாத்தியார் பகுதிகளில் தலா 7 செ.மீ.; ஆண்டிப்பட்டி, தானியமங்கலம் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தெற்கு சத்தீஸ்கர் முதல் தெலுங்கானா, ஆந்திரா வழியாக குமரிக்கடல் வரை, நிலத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் வளிமண்டல தாழ்வு பகுதி (ட்ரஃப்) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று மற்றும் நாளை சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதே நேரத்தில், இன்று முதல் வரும் 7ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3°C வரை கூடக்கூடும்; கடலோர மாவட்டங்களின் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் வெளியில் செல்வோருக்கு வெப்பத்தால் அசவுகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.





