காத்மாண்டு: நேபாளத்தில் கல்வி, சுகாதாரம், குடிமை விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் உயர்பொறுப்பில் இருந்த 1,594 அரசு அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இளம் தலைமுறையினர் நடத்திய பெரிய போராட்டங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவியை விட்டு விலக, அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி தலைமையிலான இடைக்கால அரசின் கீழ் மார்ச் 5ல் பொதுத் தேர்தல் நடந்தது.

அந்தத் தேர்தலில் ராப் பாடகராக அறியப்பட்ட பாலேந்திர ஷா தலைமையிலான தேசிய சுதந்திர கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதையடுத்து மார்ச் 27ல் பாலேந்திர ஷா பிரதமராக பதவியேற்றார்.

இதற்கிடையில், பிரதமரின் பரிந்துரையை ஏற்று அதிபர் ராமசந்திர பவுடல் அரசு ஊழியர்களை பதவி நீக்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் கொண்ட அவசர சட்டத்தை பிறப்பித்தார். அதன்படி, மார்ச் 26க்கு முன் அரசியல் உள்நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அரசு நியமனங்கள் அனைத்தும் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

இதன் விளைவாக, பல துறைகளில் உயரதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்த 1,594 பேர் சனிக்கிழமை ஒரே நாளில் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். புதிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், முக்கிய பொதுத் துறை நிறுவனங்கள் உயரதிகாரிகள் இன்றி செயல்பாடுகளில் சிரமம் எதிர்கொள்கின்றன.