புதுச்சேரி சட்டசபையின் 30 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய நடந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியை யார் அமைப்பார்கள் என்பதை தேர்தல் கமிஷன் ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் அறிவிக்க உள்ளது.
கடந்த மாதம் 9ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 30 தொகுதிகளிலும் 1,099 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தபால் ஓட்டுகள் 1.36% உட்பட மொத்த வாக்குப்பதிவு 91.23% என பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆறு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மூன்று மையங்கள்; காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு மையம் என அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்கி, காலை 8.30 மணிக்கு EVM எண்ணிக்கை ஆரம்பமாகிறது.
ஓட்டு எண்ணிக்கை இரு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 17 தொகுதிகளின் முடிவுகள் பகல் 2 மணிக்குள், இரண்டாம் கட்டமாக 13 தொகுதிகளின் முடிவுகள் மாலை 5.30 மணிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்–பா.ஜ.–அ.தி.மு.க–ல.ஜ.க கூட்டணி ஒருபுறமும், காங்கிரஸ்–தி.மு.க கூட்டணி மறுபுறமும் களமிறங்கியுள்ள நிலையில், த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்தனியாக போட்டியிட்டதால் நான்கு முனைப் போட்டியாக பரபரப்பு அதிகரித்துள்ளது.





