சென்னை: பல்வேறு வழக்குகளின் காரணமாக தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவுத்துறை ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

சார்-பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களை அலைக்கழிப்பதும், ஒவ்வொரு பணிக்கும் லஞ்சம் வசூலிப்பதும் குறித்து புகார்கள் எழுந்தன. 2021 முதல் 2026 வரையிலான காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளில் சிக்கியது, அங்கீகாரமில்லாத மனைகள் பதிவு, அரசு வருவாய் இழப்பு போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் தொடர்புடைய பல சார்-பதிவாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். துறை ரீதியான விசாரணை முடிந்த பின்னரும், சிலரிடம் குற்றம் உறுதியாகாத நிலையிலும் சஸ்பெண்ட் உத்தரவு தொடர்ந்ததால், அதை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

கடந்த மார்ச் மாதம் இத்துறையின் அமைச்சராக இருந்த மூர்த்தி, சஸ்பெண்ட் ஆனவர்களை மீண்டும் பணியில் சேர்க்க அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை காரணமாகக் காட்டி அப்போது உத்தரவு வெளியிடப்படவில்லை.

தற்போது பதிவுத்துறை ஐ.ஜி. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நான்கு சார்-பதிவாளர்கள் மற்றும் நான்கு உதவியாளர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து புதிய பணியிடங்களையும் ஒதுக்கியுள்ளார். தகுதி உள்ள மற்றவர்களும் விரைவில் மீண்டும் பணியில் சேர்க்கப்படலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.