திருவனந்தபுரம்: கேரள சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 நடைபெற உள்ள நிலையில், அதன் முடிவுக்குப் பிறகு நாட்டின் எந்தப் பகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் இல்லாத நிலை உருவாகலாம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான வெற்றியை சுட்டிக்காட்டும் சூழலில், “ஒரு எம்பி முதல்வராக முடியுமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நேரடி பதில் அளிக்காமல், காங்கிரஸில் முதல்வர் தேர்வுக்கு வழக்கமான நடைமுறை இருப்பதாக கூறினார்.

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, கட்சி தலைமை நியமிக்கும் பார்வையாளர் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை சந்தித்து அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்வார் என்றும், பின்னர் டில்லியில் மேலிடத்திடம் தெரிவித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தரூர் விளக்கினார்.

மேலும், தேர்தலுக்குப் பிந்தைய முக்கிய செய்தியாக, இடதுசாரி ஜனநாயக முன்னணி இந்தியாவின் எந்தப் பகுதியிலும் ஆட்சியில் இல்லாத நிலை உருவாகலாம் என்று அவர் கூறினார். 2011ல் காங்கிரஸ் வென்றபோது கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தோற்றாலும், அப்போது திரிபுராவில் அவர்கள் ஆட்சியில் இருந்ததாகவும், இந்த முறை அது நடக்காது என்றும் அவர் நினைவூட்டினார்.