திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், கட்டாய தரச் சோதனைகள் இல்லாமல் 70 லட்சம் கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக ஆந்திர அரசு நியமித்த தனிநபர் விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரித்த சி.பி.ஐ., விலங்கு கொழுப்பு கலக்கப்படவில்லை என உறுதிப்படுத்தியதுடன், தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டது.
இதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ் குமார் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன், பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், 2022 ஜூலை 1 முதல் அமலான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கட்டாய பரிசோதனையை முதலில் நடைமுறைப்படுத்த திட்டமிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அதிகாரிகள், பின்னர் முடிவை மாற்றி வினியோகஸ்தர்களுக்கு விலக்கு அளித்ததாக கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில், 2022 ஆகஸ்ட் 3-ல் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன ஆய்வக சோதனையில் நெய்யில் தாவர எண்ணெய்கள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், அந்த தகவல்கள் மறைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதும், மிகக் குறைந்த விலையிலான ஏலங்களை ஆய்வு இன்றி ஏற்றதும், சில நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்ட பிறகும் புதிய ஆர்டர்கள் தொடர்ந்ததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், TTD-க்கு சொந்தமான ஆய்வகத்தில் கலப்படத்தை கண்டறியும் நவீன உபகரணங்கள் இல்லை என்றும், ஆய்வக மேம்பாட்டு பணிகள் மூன்று ஆண்டுகள் தாமதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மொத்த குறைபாடுகளுக்கு தேவஸ்தான நிர்வாகம், கொள்முதல் குழு உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பால் பண்ணை நிபுணர்கள் பொறுப்பென அறிக்கை தெரிவித்துள்ளது.





