சென்னை: இந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டு தொகுதிகள் கவனம் ஈர்த்துள்ளன. கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் ஒருவரும் களத்தில் இல்லை.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முக்கிய அரசியல் கட்சிகளுடன் பொதுமக்களும் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பொதுவாக சுயேட்சை வேட்பாளர்களின் பிரசார அணுகுமுறை, களச் செயல்பாடு போன்றவை தேர்தல் காலத்தில் கவனிக்கப்படுவது வழக்கம். வாக்கு எண்ணிக்கையின்போதும் அவர்களின் பங்களிப்பு சில நேரங்களில் பேசுபொருளாகும்.

இந்த முறை ஆனால், 234 தொகுதிகளில் கிணத்துக்கடவு மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டில் மட்டும் சுயேட்சைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் காங்கிரஸ், அதிமுக, தவெக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர். இதற்கு மாறாக, விஐபி தொகுதியாகக் குறிப்பிடப்படும் தொண்டாமுத்தூரில் 16 சுயேட்சைகள் போட்டியிட்டும், ஒருவர் கூட பிரசாரத்திற்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.